நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்புமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு குறித்து இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய போதும், இது தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசிய பிறகும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காதது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர்கள் இருவர் சந்தித்து வலியுறுத்திய போதும், குறிப்பிட்ட காலத்திற்குள் நீட் விலக்கு மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியான பதிலை ஆளுநர் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில் அனுப்பிவைக்க, முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். “நீட் விலக்கு தொடர்பாக அமைச்சர்கள் சந்தித்தபோது ஆளுநர் உறுதியான பதில் அளிக்காததால், தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை” என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பினையும் கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். ஆளுநருக்கும், மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும், சுமூகமாகவும் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.