தென் கிழக்கு டெல்லியில் ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 13பேர் படுகாயம் அடைந்தனர். தென்கிழக்கு டெல்லியின் ஜாமியா பகுதியில் அமைந்துள்ள துரித உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலிண்டர் வெடித்ததில் கடை முற்றிலும் எரிந்துள்ள நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் 43℃ க்கும் அதிகமாக வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில் சமீப நாட்களாக தொடர்ச்சியாக தீ விபத்து அதிகரித்து வருகிறது என தீயணைப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கான காரணம், ஒரு சில தீ விபத்துக்கள் ஏசி உள்ளிட்ட உயர் மின் அழுத்த பொருட்களின் தொடர் இயக்கம் காரணமாகவும், மற்ற தீ விபத்துக்கள் சிலிண்டர் வெடித்தும் ஏற்படுகிறது. ஜாமியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் எனவும் சிலருக்கு 30% தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.