நாட்டில் கொரோனா காரணமாக பயணம், சுற்றுலா, விமான போக்குவரத்து ஆகிய துறைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த போதும், சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியில் இந்தியா மைல்கல் சாதனை படைத்து இருப்பதாக மத்திய வர்த்தக மந்திரி பியூஸ்கோயல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சென்ற 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2021-22-ம் நிதியாண்டில் நாட்டின் சேவை ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவில் 250 பில்லியன் டாலராக (சுமார் ரூ.18.75 லட்சம் கோடி) அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.
இதைப்போன்று சரக்கு ஏற்றுமதியும் 400 பில்லியன் டாலராக (சுமார் ரூ.30 லட்சம் கோடி) அதிகரித்து உள்ளதாக கூறிய பியூஸ் கோயல், இந்தியாவில் ஐபிஎல் ஜூரம் வாட்டி வதைப்பதை போன்று சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழும் புதிய உச்சங்களை எட்டுவதாக கூறினார். இதையடுத்து சேவைகள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் நிர்வாக ஆலோசகர்கள், கணக்காளர்கள், நிறுவன செயலாளர்கள், என்ஜினீயர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் ஆகிய அனைத்து தொழில் வல்லுனர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.