மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இன்திஜார் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இன்திஜார் தனது மகன் ஜிசாந்த், அசன் ஆகியோருடன் சேர்ந்து ஜக்காம்கோட்டை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி இன்திஜாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இன்திஜார் மற்றும் அசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
மேலும் காயமடைந்த ஜிசாந்த்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.