அரசு அலுவலகங்களின் முன் தற்கொலை முயற்சி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரித்தார்.
கலெக்டர் அலுவலகம், காவல் நிலையம் முன்பாக சிலர் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிப்பதும், உடல்களை கத்தியை கொண்டு வெட்டுவதும் என மிரட்டல் விடுத்து தற்கொலை முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சம்பந்தபட்ட துறையிடம் தீர்வு கேட்டும் கிடைக்கவில்லை எனில் அந்த துறையின் உயர் அதிகாரியிடம் முறையிட்டு அதற்கான தீர்வினை காண வேண்டும்.
அதற்காக மண்ணெண்ணெய் ஊற்றுவது, உடலை கத்தியைக் கொண்டு வெட்டுவது, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உயிரை மாய்த்துக் கொள்வது சரியான தீர்வு ஆகாது. இது சட்டப்படி குற்றமாகும். இனி வருகின்ற காலங்களில் மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.