அரியானா, டெல்லி போன்ற சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் டெல்லி மற்றும் அரியானா போன்ற சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லியில் கடந்த திங்கட்கிழமை பாதிப்பு 137 ஆக இருந்த நிலையில், நேற்று 325 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 42 நாட்களில் இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பில் அதிகமாகும். அதிலும் குறிப்பாக தெற்கு டெல்லியில் உள்ள பள்ளியில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். பள்ளிகளில் மீண்டும் தொடர் வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் தொற்று கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என்பது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் கூறப்பட்டிருக்கிறது. மேலும் அரியானாவில் தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து நேற்று 170 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,21,743 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 810 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 7 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 11,191 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது புதிய நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று 6,66,660 டோஸ்களும், இதுவரை 186 கோடியே 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 83.11 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதில் நேற்று 3,67,213 மாதிரிகள் அடங்கும்.