தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் உள் கட்டமைப்பில் அடிப்படைத் தேவைகளை தீர்த்து வைப்பதற்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையுடன், தமிழக அரசானது மல்லுக்கட்டி கொண்டிருக்கிறது. அதாவது தமிழ்நாடு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. ஆனால் தேவையான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. மேலும் கழிவறைகளை தூய்மை செய்ய பணியாளர்கள் இல்லை. இதன் காரணமாக மாணவர்கள் மூலம் கழிவறையை தூய்மை செய்து, அவ்வப்போது பிரச்னையாகி விடுகிறது. இதற்கிடையில் மாணவியர் மட்டுமல்லாது, ஆசிரியைகளுக்கும் பாலியல் தொல்லைகள் அதிகரிக்கிறது.
ஆகவே பருவ வயதில் தவறான முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பதற்கு சுழற்சி முறையிலாவது உளவியல் ஆலோசகர்களை பணியமர்த்த வேண்டும். இதற்கிடையில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் உறுதித்தன்மை இல்லாமல், மரத்தடியில் பாடங்கள் நடத்தப்படும் நிலை இருக்கிறது. இத்தனை அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்ததாலேயே அத்திட்டத்தை எதிர்த்து, பணம் செலவு செய்து “ஸ்டிக்கர்” ஒட்ட ஒரு குழு அமைக்க வேண்டிய அவசியம் என்ன?… இதை கல்வியாளர்கள் கேட்பதை விட தங்களது பிள்ளைகளுக்கு அரசு இலவசமாக கல்வி தரவில்லை, மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் தருகிறது என்பதை உணர்ந்து, பெற்றோர்தான் அரசை கேட்க வேண்டும். அப்போது தான் இந்த விடியல் அரசில் ஒரு விடிவுகாலம் கிடைக்கும்.