ஷாகாரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியா நாட்டில் வடமேற்கு சொகொட்டோ மாகாணத்தில் ஷாகாரி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கிடான் மகானா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்ல ஷாகாரி ஆற்றின் வழியாக படகு மூலம் பயணிப்பது வழக்கம். அதைப்போல் இந்த முறையும் படகு பயணிகளுடன் ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மரத்தின் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த பயணிகளில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உள்ளூர் அரசு தலைமை அதிகாரியான அலியு தந்தானி செய்தியாளரிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த உள்ளூர் நீச்சல் வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதலில் 26 உடல்கள் மீட்கபட்டதாகவும் அவர்களில் 20 பேர் பெண்கள் எனவும் 5 பேர் குழந்தைகள் எனவும் தெரியவந்தது. மேலும் படகில் பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை விவரம் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.