கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை தனது நண்பரான ஹரிஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெமிலிச்சேரி அருகே இருக்கும் சர்வீஸ் சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் படுகாயமடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனை அடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஹரிஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாமலையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.