உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளழகர் மதுரை மாநகருக்குள் வருவதால் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். அவர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்க புறப்பட்டார். நாளை அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். இந்நிலையில் அதிக அளவு தண்ணீர் வருவதால் மதுரையில் நாளை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வைகை ஆற்றின் கரையோரங்களில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.