நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை குலாலர் தெருவில் இருக்கும் குடியிருப்பில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பிற வாகனங்களிலும் தீ வேகமாக பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகனங்களில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 5 மோட்டார் சைக்கிள்கள், 4 சைக்கிள்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.