மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் மாமனார் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் கூலித் தொழிலாளியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரின் மகளான திலகம் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் இளவரசனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால் திலகம் இளவரசனை விட்டு பிரிந்து கடந்த 5 மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இளவரசன் அங்கு சென்று தனது மனைவி திலகத்தை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த இளவரசன் பின்புறமாக சென்று வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இதனால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து தட்டிக்கேட்ட இளவரசனின் அக்காள் கணவரான கருப்பண்ணன் என்பவரை சங்கர் மிரட்டியுள்ளார். இதற்கிடையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த நகை, 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.