தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் கண்ணுபொத்தை காலணியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய முதல் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் இரண்டாவதாக சித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சங்கர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த சங்கர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.