ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த நாகநாதன் என்பவருடைய மகன் ஹரிஷ் பாபு. இவர் அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று காலை வகுப்பு முடிந்து மதிய உணவு இடைவெளியில் விடுதிக்கு சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் வகுப்பிற்கு வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர் சக மாணவனை விட்டு விடுதியில் சென்று பார்த்துவர கூறியுள்ளார். அந்த மாணவன் விடுதிக்குச் சென்று பார்த்தபோது ஹரிஷ் பாபு மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர் ஓடிவந்து தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை நகர காவல் துறையினர் மாணவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காகஅருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் அருப்புக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஹரிஷ் பாபுவுடன் விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்களிடமும் பள்ளியின் ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நன்றாக படித்து வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.