பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ராணித்தோட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு அரசுப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். இவர் பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க வேண்டும்.
அதன்பிறகு மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றால் அவர்களை நடத்துனர்கள் கீழே இறக்கி விட வேண்டும். இதனையடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் வாட்ஸ்அப் எண் 7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை குடும்பத்துடன் செலவழியுங்கள் எனவும், ஓட்டுநர்கள் யாரும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது எனவும், சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார். அதன்பிறகு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் தங்களுடைய குறைகளை கூறினர்.
அவர்கள் பள்ளி முடியும் நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையத்தில் நின்று மாணவர்களை படிக்கட்டில் ஏற விடாமல் தடுக்க வேண்டும். அதன்பிறகு அரசு பேருந்துகளுக்கு கதவுகள் அமைக்க வேண்டும். இவர்கள் அரசு பேருந்துகளுக்கு இடையூறாக செயல்படும் இருசக்கர வாகனங்கள், வேன்கள், மினி பஸ்கள் போன்றவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை கூறினர். இதற்கு போலீஸ் சூப்பிரண்டு அனைத்துத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தின் போது உங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக பேசி உரிய தீர்வு காணப்படும் என்றார்.