துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதை கண்டித்து தந்தை பெரியார் அமைப்பினர், வழக்கறிஞர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கோயம்புத்தூர் தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் கு. ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர் வெண்மணி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ரஜினியின் புகைபடத்தை கிழித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கறிஞர் வெண்மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது தாழ்த்தப்பட்ட மக்கள் அமைச்சர் பெருமக்கள் ஆவதற்கு பெரியாரின் கோட்பாடுகள், சாதி ஒழிப்பு கருத்துக்கள் தான் முக்கிய காரணம்.
ஜாதியை ஆதரிக்கின்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்து பெரியார் பற்றி அவதூறு கூறிவருகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் எவ்வித ஆதாரங்களும் இன்றி பெரியாரை பற்றி அவதூறாக பேசிய ரஜினியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து, அவர் கூறுகையில் ரஜினி உடனடியாக அவர் கூறிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும்.
இல்லையெனில் அவரது திரைப்படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என பிரச்சாரம் செய்வோம் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டம் காவல் துறையின் அனுமதி மீறி நடைபெற்றதால் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.