மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வகுரணி என்ற கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணகுமார் என்பவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இவர் மூன்று வருடங்களாக பப்பாளி, கொய்யா உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளார். ஆனால் சந்தையில் இயற்கை பழங்களுக்கு தனியாக மதிப்பில்லை. இருப்பினும் மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான பழங்களை கொடுக்கிறோம் என்ற மகிழ்ச்சி மட்டும் மிச்சமாகிறது என்று கூறுகிறார் கிருஷ்ணகுமார்.
மேலும் அவர், “என்னிடம் உள்ள 9 1/2 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 வருடங்களாக மரவள்ளி கிழங்கு, கடலை, கரும்பு, வாழை, பருத்தி, காய்கறி, நெல் என நான் சாகுபடி செய்யாத பயிர்களே கிடையாது. ஒவ்வொன்றையும் சாகுபடி செய்த போது புதுவிதமான அனுபவம் கிடைத்தது. பருத்தி, நெல் பயிரிட்டால் பூச்சிகளால் சேதம், விலை கிடைக்காமல் நஷ்டம் என ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்தது. அதன் பிறகு தோட்டக்கலை பயிர்களுக்கு நிரந்தரமாக மாறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
கொய்யா (Guava Cultivation) :-
தைவான் பிங்க் ரக கொய்யா சுமார் 3 ஏக்கரில் நட்டுள்ளேன். ஆறுக்கு ஆறடி அடர் நடவு முறையில் நட்டேன். வருடத்திற்கு இரண்டு முறை கவாத்து செய்கிறேன். சீசன் என்றில்லாமல் வருடம் முழுவதும் பழங்கள் உற்பத்தியாகி கொண்டே இருக்கிறது. வருடத்திற்கு ரூ.8 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. இதற்கு சூடோமோனஸ், வேப்பம் புண்ணாக்கு, மட்கிய தொழு உரம், மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்துகிறேன். 10 வருடங்கள் வரை கொய்யா பலன் கொடுக்கும். அதேபோல் பயிர்களில் உள்ள பூச்சிகளை விரட்ட உயிர் பூச்சிக்கொல்லி மருந்தை தயிரில் கலந்து பயிர்களுக்குத் தெளித்து வருகிறேன்.
எலுமிச்சை 1 1/2 ஏக்கரில் நட்டு ஒரு வருடமாகிறது. ஆனால் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். தர்பூசணியும், பப்பாளியும் 1 1/2 ஏக்கரில் பயிரிட உள்ளேன். நிலத்தை 2அடி அகல மேடாக்கி அதன் மேல் சொட்டு நீர் குழாய் வைத்து பாலிதீன் ஷீட்டால் மூடி இருக்கிறேன். பப்பாளி நாற்று மற்றும் தர்பூசணி விதைகளை ஆங்காங்கே துளையிட்டு நட வேண்டும். தண்ணீர் சொட்டு நீராக கிடைக்கிறது. களை என்பதே இதில் வளராது என்பதால் வருடத்திற்கு ரூ.5 ஆயிரம் வரை குறையும். பப்பாளி வளர்ந்து பலன் தர 8 மாதங்கள் ஆகும். அதற்குள் தர்பூசணியை மூன்று முறை பயிரிட்டு இரண்டு மாதங்களில் அறுவடை செய்யலாம்.
பப்பாளி சாகுபடி (Papaya Cultivation) :-
‘ரெட் லேடி’ ரக பப்பாளி 1 1/2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளேன். இந்த பப்பாளிகளை மரத்திற்கு மரம் 7 அடி இடைவெளி விட்டு நட்டேன். நட்ட 8ஆவது மாதத்தில் இருந்து காய்க்கிறது. குப்பை உரம், பயோ உரம், உரம், பழக்கன்று என செலவு மட்டும் ரூ.1 லட்சமானது. அதேபோல் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. இந்த பப்பாளி மரம் மூன்று ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும் என்று கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.
இயற்கை விவசாயம் (Organic Farming) :-
பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் ஆகிவற்றை பயன்படுத்தாமல் இயற்கை பழங்களை மூன்று வருடங்களாக உற்பத்தி செய்கிறேன். ஆனால் இதற்கென சந்தையில் கூடுதல் விலை எதுவும் கிடைக்கவில்லை. மார்க்கெட்டிங் துறையிலும் கவனம் செலுத்த இயலாததால் சாதாரண விலைக்கே பழங்களை விற்று வருகிறேன். அதுவே லாபத்தில் கட்டுப்படியாகிறது என்று கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.