சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் நகரில் நடைபெற்ற சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “நேதாஜி தனது போராட்டங்கள் மூலம் அனைவரின் நம்பிக்கைகளையும் ஒருவர் மதிக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறார். நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
சுபாஷ் சந்திர போஸ் இந்து மகா சபாவின் பிரித்தாளும் அரசியலை கடுமையாக எதிர்த்தார். அவர் மதசார்பற்ற இந்தியாவை உருவாக்கவே கடுமையாக போராடினார். ஆனால் இப்போது, மதசார்பின்மையை பின்பற்றுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிகள் நடைபெற்றுவருகிறது.
மத்திய அரசு நேதாஜியின் இறுதி காலம் குறித்த கோப்புகளை வெளியிட வேண்டும். 70 ஆண்டுகள் ஆன பின்னரும் அவருக்கு என்ன ஆனது என்பது நமக்கு தெரியாமல் இருப்பது நமக்கு கேவலம்” என்றார்.