Categories
தேசிய செய்திகள்

தாக்கரே அயோத்தி பயணம், காங்கிரசுக்கு சிவசேனா அழைப்பு…!!

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணத்தில் கலந்துக்கொள்ளுமாறு கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு சிவசேனாவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக உள்பட எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சமயத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் மகா (மகாராஷ்டிரா விகாஸ் அகாதி) கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சிக்கு வந்தது.
இதனை ‘மூன்று சக்கர ஆட்சி’ என்று பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் கடந்தாண்டு (2019) நவம்பர் மாதம் 28ஆம் தேதி மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுக்கொண்டார். தாக்கரே அரசு வருகிற மார்ச் மாதத்துடன் 100ஆவது நாளை கடக்கவுள்ளது.

இதையடுத்து உத்தவ் தாக்கரே அயோத்தி ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இந்நிகழ்வில் பங்கெடுங்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு சிவசேனாவின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், “அயோத்தி செல்வோம் (சலோ அயோத்தியா). சிவசேனா அரசு 100 நாட்களை கடந்த பின்னர், உத்தவ் தாக்கரே அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்நிகழ்வில் சிவசேனாவின் கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் ராவத், “ எங்கள் கூட்டணியினர் உள்பட நாங்கள் எல்லோரையும் அழைப்போம். அனைவரும் வீட்டில் ராமரை வணங்குகிறார்கள். ஆகவே அவர்களை எங்களோடு இணைந்துக்கொள்ள அழைப்போம்” என கூறியுள்ளார். முன்னதாக கடந்த நவம்பர் 24ஆம் தேதி உத்தவ் தாக்கரே அயோத்தியில் ராமரை தரிசித்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

Categories

Tech |