சுத்தம் செய்வதற்காக கிணற்றுக்குள் இறங்கிய நபர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே பள்ளிப்பாடி பகுதிகயில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிணற்றில் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இந்த எலியின் உடலை ராமச்சந்திரன் கிணற்றிலிருந்து அகற்றியுள்ளார். இதனையடுத்து கிணற்றை சுத்தம் செய்வதற்காக மோகன் என்பவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அதன்பிறகு பெட்ரோல் மோட்டார் மூலமாக கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெளியேறிய புகை மூட்டத்தினால் மோகனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சஜீவன் மற்றும் யோகராஜ் ஆகிய 2 பேரும் கிணற்றுக்குள் இறங்கி மோகனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சஜீவன் மற்றும் யோகராஜனுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கூடலூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கூடலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.