தமிழக அரசு கொரோனாவால் உயிரிழந்தோருக்கு நிவாரண தொகையாக ரூ.50,000 வழங்கி வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமானோர் நிரம்பி வழிந்தனர். இதனால் பலருக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு,பல உயிரிழப்புகளும் ஏற்பட்டதால், பல குடும்பங்கள் தங்களுக்கு நெருக்கமான சொந்தங்களை இழந்து தவிக்கின்றனர்.
இந்த சூழலில் பல குடும்பங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவர்களை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் பலர் தவித்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அந்த குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவு அளித்தது.மேலும் இது குறித்து புதிய அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த மார்ச் 20 ஆம் தேதிக்கு முன்னால் கொரோனா தொற்றினால் இறந்திருந்தால் அந்த மனுதாரர்கள் வரும் மே 18 ஆம் தேதிக்குள் மனு சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் 20.03.2022–க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து மார்ச் 20 ஆம் தேதிக்கு பின்னால் கொரோனா தொற்றினால் இறந்திருந்தால் அந்த மனுதாரர்கள் இறந்து 90 நாட்களுக்குள் மனுவினை சமர்ப்பிக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகமானது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது பற்றி மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.