மேட்டு இடையம்பட்டியில் எருதுவிடும் விழாவில் 353 காளைகள் கலந்து கொண்டன.
வேலூர் மாவட்டம், பாகாயம் அருகில் மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. மேலூர் தாசில்தார் செந்தில் தலைமை தாங்கிய இந்த விழாவில் ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த விழாவிற்கு வந்தவர்களை வருவாய் ஆய்வாளர் உலகநாதன் வரவேற்று பேசினார்.
காலை 10 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியை அடுத்து சப்-கலெக்டர் பூங்கொடி விழாவை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். ஒவ்வொருவரும் தங்களது காளைகளை பூக்கள், வண்ணக் காகிதங்களை கொண்டு அலங்கரித்து விழாவிற்கு அழைத்து வந்துள்ளனர். ஒவ்வொரு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு மொத்தம் 353 மாடுகள் கலந்து கொண்டு ஒவ்வொரு காளைகளும் இரண்டு சுற்றுகளாக விடப்பட்டது. ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்று விழாவை ரசித்தார்கள்.
இந்த விழாவில் மாடு முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெற்றிபெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ 70 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் 67 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் கிராம நிர்வாக அலுவலர் சங்கர், ஞானசேகரன், ஜெயசீலன், பூங்காவனம் துளசி, குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழா ஏற்பாட்டை விழா குழுவினர், ஊர் இளைஞர்கள் செய்தனர்.