Categories
மாநில செய்திகள்

தரமற்ற தார்சாலைகள்…. 2% கமிஷன் கொடுத்த ஒப்பந்ததாரர்?…. சமூக வலைததலங்களில் வைரல்….!!!!

தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கப் பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் அருகே பி.கே‌ பள்ளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ராஜிகொட்டாய் முதல் கண்ணீர்கரை வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கியது. இதற்காக 11.65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பொதுவாக தார்சாலைகள் அமைக்கும் போது 2 தளங்கள் அமைக்கப்படும். ஆனால் இப்பகுதியில் ஒரு தளம் மட்டுமே போட்டு தார்சாலை அமைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தார்சாலை போட விடாமல் ஒப்பந்ததாரரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதற்கு ஒப்பந்ததாரர் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள். நான் ஆட்சியர் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் 2% முதல் கமிஷன் தருகிறேன் என கூறியுள்ளார்.

இதனால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று தரமற்ற சாலை அமைக்கப்படுவதாக கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதன்பிறகு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள் என கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தார்சாலை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்த நிலையில், இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை. இந்நிலையில் சாலை அமைத்து 2 நாட்களே ஆன நிலையில் சாலையிலிருந்து ஜல்லி கற்கள் பெயர்கிறது.

இதனால் சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் தரமற்ற சாலை அமைக்கப்பட்டது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் சாலையில் உள்ள ஜல்லி கற்களை கையில் அள்ளி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இப்பகுதியில் தரமான முறையில் தார்ச்சாலை அமைத்து தருமாறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் நடவடிக்கை எடுத்து தரமான சாலைகள் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |