பெண் டாக்டரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் கடந்த மார்ச் 17ம் தேதியன்று காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு தனது நண்பருடன் படம் பார்க்க சென்றுள்ளார். அதன்பின் படம் முடிந்த பிறகு நள்ளிரவில் தியேட்டர் முன் அவர்கள் நின்று கொண்டிருந்தபோது அங்கு ஒரு ஆட்டோ வந்துள்ளது. அந்த ஆட்டோவில் ஓட்டுநர் மற்றும் மூன்று ஆண்கள் இருந்துள்ள நிலையில் ஷேர் ஆட்டோ என்று கூறி அவர்களை ஆட்டோவில் ஏற்றி சென்றார்கள்.
இதையடுத்து ஆட்டோ வேலுரை வந்தடைந்த போது திடீரென்று ஆட்டோவில் இருந்தவர்கள் அந்த பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவரிடமிருந்து ஏ.டி.எம் கார்டு மற்றும் 40 ஆயிரம் பணம், 2 பவுன் நகை, செல்போன் அனைத்தையும் பறித்து சென்றனர். அந்தப் பெண்ணுடன் வந்த நபரை தாக்கி விரட்டி அடித்தார்கள். இதுகுறித்து அந்தப் பெண் டாக்டர் மாவட்ட காவல்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார்.
இப்புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிந்து சத்துவாச்சாரி வ.ஊ.சி நகர் பத்தாவது தெருவில் வசித்து வரும் ராஜா என்பவர் மகன் பார்த்திபன்(20), ஒன்பதாவது தெருவில் வசித்து வரும் இளங்கோவன் என்பவர் மகன் சந்தோஷ் குமார் என்ற மண்ட(22), பகுதி-3 தமிழ்நாடு ஜிம் பின்புறம் உள்ள நேரு நகரில் வசித்து வரும் 18 வயதுள்ள வாலிபர், பகுதி -2 நேரு நகரில் வசித்து வரும் விஜயகுமார் என்பவர் மகன் மணிகண்டன் என்ற மணி(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து 17 வயது சிறுவனை சென்னையில் உள்ள சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர். மீதமுள்ளவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். இந்நிலையில் சிறுவனை தவிர்த்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலெக்டர் குமரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையின் பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.