அந்தியூர் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே இருக்கும் அண்ணா மடுவு பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய விவேகானந்தன். இவரின் மனைவி 23 வயதுடைய திவ்யபாரதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சென்ற 12ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் முடிவு செய்தார்கள்.
இதனால் நேற்றைய முன் தினம் ஆம்புலன்சில் குழந்தை மற்றும் குழந்தையின் தாய் மல்லிகா, விவேகானந்தன், உறவினரான அய்யம்மாள், நர்ஸ் ஜோதிமணி உள்ளிட்டோர் தனியார் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த பொழுது நள்ளிரவு 12.45 மணியளவில் மழை பெய்ததால் சேரும் சகதியுமாக காணப்பட்டநிலையில் ஆம்புலன்ஸ் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் ஆம்புலன்ஸ் நொறுங்கி போனது. ஆம்புலன்சை ஓட்டிய டிரைவர் மாவு பாஷா, விவேகானந்தன், அய்யம்மாள், ஜோதிமணி உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தார்கள். குழந்தையும் மல்லிகாவும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து படுகாயமடைந்த 4 பேரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதில் அய்யம்மாள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறிவிட்டார். மாவு பாஷா, விவேகானந்தன், ஜோதிமணி உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. போலீசார் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.