தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாகதென் மாவட்டங்கள் தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சேர்ந்த மாவட்டங்களான ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில், லட்ச தீவுப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.