ஐரோப்பிய யூனியன் நாடுகளின் 18 தூதரக உறுப்பினர்களை ரஷ்ய அரசு அங்கீகரிக்க இயலாத பிரதிநிதிகள் என்று அறிவித்திருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் பெல்ஜியம், நெதர்லாந்து, செக் குடியரசு மற்றும் அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்ய தூதர்கள் 43 பேர் உளவு பார்த்ததாக கூறி அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டது.
இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்திருந்தது. இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதரக உறுப்பினர்கள் 18 பேரை அங்கீகரிக்க இயலாத அரசு பிரதிநிதிகள் என்று அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், அங்கீகரிக்க இயலாத அதிகாரிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் தூதர்கள் விரைவாக ரஷ்ய நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு ஐரோப்பிய யூனியன், ஆதாரமில்லாத, ஏற்றுக்கொள்ளதகாத, கண்டிக்கத்தக்க அறிவிப்பாக உள்ளது என்று கூறியிருக்கிறது. மேலும் எந்தவித, அடித்தளமுமின்றி ரஷ்யா இவ்வாறு அறிவித்திருப்பது, ஐரோப்பிய யூனியனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளது.