உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் 53வது நாளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய பல நகரங்கள் நிலைகுலைந்துள்ளது. இந்த போரில் பொதுமக்கள், இருநாட்டு படையினர் என்று ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இதனிடையில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் படையினர் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக உக்ரைன்-ரஷ்ய படையினர் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிசெய்து வருகின்றன.
இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்களை அமெரிக்கா நாடானது உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இந்த் நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுக்கும் செயல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கிறது என அமெரிக்காவிற்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசுக்கு ரஷ்ய அரசு தூதரகம் வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் விவகாரத்தில் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயலில் ஈடுபடுகிறது. ஆகவே உக்ரைனுக்கு மிகவும் அதிநவீன ஆயுதங்களை தொடர்ந்து வழங்கினால் கணிக்கமுடியாத விளைவுகள் ஏற்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.