இம்ரான்கான் ஆட்சியே பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதில், இம்ரான்கான் தோல்வியை சந்தித்தார். மேலும் அவர் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (வயது 70) பாகிஸ்தானின் புதிய பிரதமராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதனால் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவருக்கு ஆதரவாக பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இம்ரான்கான், அமெரிக்காவின் ஆதரவு அரசை கவிழ்த்து புதிய தேர்தலை சந்திக்க நன்கொடை அளிக்குமாறு காணொளி வாயிலாக வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் உட்பட தமது கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர், “அமெரிக்காவின் உதவியுடன் பாகிஸ்தானில் ஊழல் நிறைந்த அரசாங்கம் அமைந்துவிட்டது. எனவே தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் பாகிஸ்தான் குடிமக்கள் புதிய தேர்தலை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.