உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பலத்த காற்று வீசி இரும்புக் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நூலிழையில் உயிர் தப்பினார். விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்தனர். நாக்லா பத்மா பகுதியில் மத்திய கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அம்பேத்கர் ஜெயந்தியின் நீட்டிக்கப்பட்ட விழாவில் கலந்து கொண்டார். அப்போது லேசான மழைக்கு மத்தியில் பலத்த காற்று வீசத் தொடங்கியது.
விளக்கு அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உயரமான இரும்புக் கம்பம், மேடையில் திடீரென சரிந்து விழுந்தது. மேடையில் இருந்தவர்கள் இருபுறமும் அலறியபடி ஓட்டம் பிடிக்க, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நூலிழையில் உயிர் தப்பினார். அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்ததால் காப்பாற்றப்பட்டார். அவர் மேடையில் அமர்ந்திருந்தால் அவர் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த விபத்தில் உள்ளூர்வாசியான ராஜேஷ்குமார் (50) உயிரிழந்தார். மேலும் முன்னாள் எம்எல்ஏ குடியாரி லால் துபேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற இருவரும் பூரண நலம் பெற்று வீடு திரும்பி விட்டனர்.