பாலக்காடு மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசனை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கு SDPI தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. சீனிவாசனின் தலை மற்றும் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சீனிவாசன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் சாரீரிக் பிரமுக் ஆவார்.
பாலக்காடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது கொலை இது. ஸ்ரீனிவாசன் பாலக்காட்டில் எஸ்கேஎஸ் ஆட்டோ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறுகையில், கடைக்குள் அமர்ந்திருந்த சீனிவாசனை இரண்டு பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இச்சம்பவம் மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. கடைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்மநபர்கள் சீனிவாசனை சரமாரியாக வெட்டிக் கொன்றதாக கொலை சம்பவத்தை பார்த்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பாலக்காடு எலப்புள்ளியில் SDPI கட்சியின் நிர்வாகி சுபைர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் குற்றம்சாட்டி வரும் நிலையில் RSS பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நேற்றைய கொலைக்கு பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளதால், மாநிலம் முழுவதும் டிஜிபி எச்சரிக்கை விடுத்திருந்தார். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இதற்கிடையில், 24 மணி நேரத்திற்குள், இரண்டாவது கொலை சம்பவம் அரங்கேறியது கேரளா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.