மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்திலுள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாதேவி என்ற மனைவி உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சின்னகவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். மேலும் நீலாதேவி அங்கு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நீலாதேவி கடையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார்.
இதனையடுத்து அந்த மர்மநபர் கடையில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு திடீரென்று கடைக்குள் புகுந்துள்ளார். அதன்பின் நீலாதேவி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மர்மநபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து நீலாதேவி பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.