திருவள்ளூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுற்றுலா சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் ஆந்திராவுக்கே சென்று விசாரணை நடத்தக்கோரி போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கலம் பகுதியை அடுத்த வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசக்திவேல். உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது நண்பர்களுடன் மூன்று நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நாகலாபுரம் மாவட்டத்தில் உள்ள இராமகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின் அங்கே சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர்,
மலையின் உச்சியில் ஒரு ஓரத்தில் சர்க்கரை நோய்க்கான மூலிகைகள் இருப்பதாக கூறி அதனை பறிக்கச் செல்லும் போது தவறி கீழே விழுந்து விட்டார். இதையடுத்து அவரது உடலை மீட்டெடுத்த நண்பர்கள் வெள்ளியூர் கிராமத்திற்கு எடுத்துச்சென்று மலையில் இருந்து தவறி விழுந்து தேவசக்திவேல் இறந்து விட்டதாக கூறினர். இதனை நம்பாத உறவினர்கள் நீங்கள்தான் தேவ சக்தி வேலை அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக அவரிடம் தகராறு செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சக்திவேல் இறந்த இடம் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் மாவட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், நீங்கள் அங்கு சென்றுதான் முறையிட வேண்டும் இங்கு எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினர். அதன்பேரில் சக்திவேலின் உடலை எடுத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் நாகலாபுரம் மாவட்ட தலைமை காவல் நிலையம் முன்பு கோஷங்கள் எழுப்பி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆந்திர காவல்துறையினர் தேவ சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.