அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வகுமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்தை செல்வகுமார் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது அரசு பேருந்தின் மீது ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மைக்கேல் என்பவர் படுகாயம் அடைந்தார். இவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மைக்கேல் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.