தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா தொற்றால் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடந்து வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகியது. அந்த வகையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதன்பின் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வானது மே 5ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
அதனை தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6- 30ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது. இதன் முடிவுகளானது ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில் மாவட்ட வாரியாக தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தும் விடைத்தாள்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனுப்பப்பட்டு வருகிறது. அவ்வாறு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விடைத்தாள்களுடன் “டாப் ஷீட்” இணைத்து தைக்கும் பணியும் நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை தொடர்ந்து இப்போது 6-9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கான காலஅட்டவணை மற்றும் வினாத்தாள் வடிவமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் 1-5ஆம் வகுப்பு வரை மே 13 ஆம் தேதியோடு வகுப்புகள் முடிவடையும். இதில் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் ஆண்டு தேர்வு தொடங்கும் எனவும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும், 12 ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.