2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதாச்சாரங்கள் இருக்கிறது. தங்கத்திற்கு மட்டும் ஸ்பெஷலாக 3% என தனி விகிதாச்சாரம் உள்ளது. மேலும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், 5% விகிதாச்சாரத்தை நீக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியாகியிருக்கிறது. 5% விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3% விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு மீத பொருட்களுக்கு 8% என்ற புதிய விகிதாச்சாரத்தை கொண்டு வர அரசு ஆலோசித்து வருகின்றது.
இதில், வெகுமக்கள் பயன்படுத்தும் முக்கிய பொருட்களை 3% விகிதாச்சாரத்தில் கொண்டுவரவும், மீதமுள்ள பொருட்களை 8% விகிதாச்சாரத்தில் வைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும் வருவாயை பெருக்குவதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.5% விகிதாச்சாரத்துக்கு பதிலாக 7%, 8%, 9% ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு உருவாக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு 1% விகிதாச்சார உயர்வுக்கும் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
7%, 8%, 9% ஆகிய மூன்று விகிதாச்சாரங்கள் பரிசீலனையில் இருந்தாலும், 8% விகிதாச்சாரத்தை ஜிஎஸ்டி கவுன்சில் தேர்வு செய்யும் எனவும் தெரிவிக்கின்றனர். ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் கொண்டுவர கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த குழுவின் அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் இறுதிகட்ட முடிவு எடுக்கப்படுகிறது.