உக்ரைனின் மிக முக்கிய துறைமுகமான மரியுபோலை கைப்பற்றுவதற்காக பலவாரங்களாக கடுமையான தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் சனிக்கிழமையான (நேற்று) அதன் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைன் ராணுவ படைகளை துடைத்து எறிந்து விட்டதாக கூறியுள்ளது.
இது பற்றி ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கையில், அசோவ் கடலில் அமைந்திருக்கின்ற துறைமுகமான மரியுபோலின் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைனிய ராணுவ படைகளை அகற்றிவிட்டதாகவும், சில வீரர்கள் மட்டும் அசோவ்ஸ்டல் உலோக ஆலையில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் கூறியுள்ளது.
இவ்வாறு தப்பியோடிய சில வீரர்களும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைவதே ஒரேவழி எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது. இந்த அறிவிப்பிற்கு இதுவரை உக்ரைன் எதுவும் பதில் அளிக்காத நிலையில், மரியுபோல் நகரில் நடைபெற்ற தாக்குதலில் கிட்டத்தட்ட 4000 வீரர்கள் வரை உக்ரைன் இழந்து இருப்பதாகவும், சுமார் 1464 உக்ரைனிய அதிகாரிகள் ரஷ்யாவிடம் சரணடைந்து இருப்பதாகவும் கூறியுள்ளது.
இவை உக்ரைனுக்கு திறம்பபெறமுடியாத இழப்பு என தெரிவித்துள்ள ரஷ்யா, இதுவரை 23,367 நபர்களை உக்ரைன் இழந்து இருப்பதாக தெரிவித்து இருந்த நிலையில் , இதுபற்றிய எந்தவொரு ஆதாரத்தையும் அழிக்கவில்லை. மேலும் இவர்களில் எத்தனை நபர்கள் இறந்துள்ளார் எத்தனை நபர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள் என்ற தகவலையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.