கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டலாம்பட்டி அருகே இருக்கும் பெரிய புத்தூர் செட்டி காட்டில் வாழ்ந்து வந்தவர் சின்னப்பையன்(45). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை தனது மொபட்டில் கொண்டலாம்பட்டி வந்து விட்டு பின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு கிணற்றில் இருக்கும் பகுதிக்கு அருகே சென்றபோது எதிர்பாராவிதமாக அங்கிருந்த 50 அடி ஆழ பாழும் கிணற்றில் விழுந்து விட்டார்.
பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து சூரமங்கலம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சின்னப்பையனின் உடலை மீட்டார்கள். இச்சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கௌரி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.