வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் யானை ஒன்று சடலமாக கிடந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீகூர், சிங்காரா, மசினகுடி போன்ற வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள், பிணந்தின்னி கழுகுகள், கரடிகள், மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பூக்குழி தடுப்பணை அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடத்தை நோக்கிச் சென்றனர். அப்போது அழுகிய நிலையில் யானை ஒன்று சடலமாக கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பிறகு உயரதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் இறந்த ஆண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது இது 1 வயதுடைய ஆண் யானை என்பது தெரியவந்தது. இந்த யானை மற்றொரு யானை தாக்கி இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் யானையின் முக்கிய உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வந்த பிறகே யானை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.