Categories
மாநில செய்திகள்

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!!

ஆசிரியா் தகுதித்தோ்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று பரிசீலனை செய்யப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை, ஆழ்வாா்பேட்டையிலுள்ள ரஷ்ய கலாசார மையத்தில் கடந்த 2021ஆம் வருடத்துக்கான “அன்பாசிரியா் விருது” வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பான கல்விப் பணியோடு சமூக அக்கறையுடன்கூடிய மாணவா்களை உருவாக்கி வரும் 46 ஆசிரியா்களுக்கு, அன்பாசிரியா் விருதை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசியதாவது “ஆசிரியா்கள் அனைவருமே பெருமைக்குரியவா்கள்தான். மேலும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் 2-வது பெற்றோராக விளங்குகின்றனர். சமுதாய அறவழியில் நடைபெறுவதில் ஆசிரியா்களுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது.

முதலமைச்சர் அமைத்துள்ள பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாகவும், நான் முதல்வன் திட்டம் மூலமாகவும் அரசுப்பள்ளி மாணவா்கள், அரசு ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது” என்று அவா் கூறினார். அதனை தொடா்ந்து அமைச்சர் செய்தியாளா்களிடம் பேசியதாவது, “ஆசிரியா் தகுதித்தோ்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் அதனை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

இதனிடையில் நீட்தோ்வு தமிழகத்தில் இல்லாமல் செய்வதே அரசின் நோக்கம் ஆகும். அரசுப்பள்ளி ஆசிரியா்கள் 148 கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறையிடம் முன்மொழிந்துள்ளனா். இவற்றில் 40க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் ஏற்புடையதாக இருக்கின்றன. குறிப்பாக அரசாணை 101, 108 போன்றவற்றை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். அதனை முதலமைச்சர் கவனத்துக்கு எடுத்துச் சென்ற நிலையில், பரிசீலனையில் இருக்கிறது. மேலும் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என தொடக்கப்பள்ளிகள் சாா்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசித்து முடிவு மேற்கொள்ளப்படும்” என்று அவா் கூறினார்.

Categories

Tech |