GST வரி விகிதத்தில் 5 % விகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலித்து வருகிறது. இந்த விகிதப்பிரிவில் இடம்பெற்றுள்ள சில பொருட்கள் 3 % வரி அடுக்கிலும், ஏனைய பொருள்கள் 8 % வரி அடுக்கிலும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையில் மே மாதம் நடைபெற உள்ள GST கவுன்சில்கூட்டத்தில் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சில பொருட்களுக்கு வரிஉயரக்கூடும். ஏராளமான மாநிலங்கள் வரிவருவாயைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அனைத்துக்கும் மத்திய அரசின் சலுகையை சார்ந்திருக்க முடியாது என்பதால் வரிஉயர்வை மேற்கொள்ள GST கவுன்சில்கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தது. இப்போது அமலில் GST வரி இனங்கள் 5 %, 12, 18, 28 % அடுக்குகளாக இருக்கின்றன. இதை தவிர தங்கமும், தங்க நகைகளும் 3 % வரி அடுக்கில் இருக்கின்றன. மேலும் வரி இனங்களுக்குள் வராத, சந்தை மதிப்பு பெறாத, பொட்டலமிடப்படாத உணவுப் பொருள்கள் அனைத்தும் வரிவிலக்குப் பட்டியலில் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் வரிவிலக்குப் பட்டியலிலுள்ள சில உணவுப்பொருள்களை 3 % வரி இனப்பட்டியலுக்குள் கொண்டுவர GST கூட்டத்தில் முடிவு செய்யலாம் எனத் தெரிகிறது. அதுபோன்று 5 % வரி விதிக்கப்படும் பொருட்களுக்கு 7 சதவீதமாகவோ அல்லது 8, 9 சதவீதமாகவோ உயர்த்துவதும் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இருப்பினும் மத்திய, மாநில அரசுகளின் நிதியமைச்சர்களின் கலந்துரையாடலுக்குப் பின்பே GST கவுன்சில் இறுதி முடிவை எடுக்கும். ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் தற்போதுள்ள 5 % இன பொருள்களுக்கு, அதிலும் குறிப்பாக பொட்டலமிடப்பட்ட பொருள்களுக்கு கூடுதலாக ஒரு சதவீத வரியை அதிகரித்தாலும் அதுவே வருடத்துக்கு ரூபாய் 50,000 கோடி வரி வருவாயை ஈட்டித்தரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இருந்தாலும் இப்போது 5 % வரிவிதிப்புள்ள பொருள்களிலுள்ள பெரும்பாலானவற்றை 8 % வரி இனப்பட்டியலுக்குள் கொண்டு வரவே GST கவுன்சில் விரும்புகிறது. GST வரம்பின் அடிப்படையில் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு மிக குறைந்த வரியோ அல்லது வரி விலக்கோ வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஆடம்பர பொருட்களுக்கு அதிகமான வரி விதிக்கப்படுகிறது. சில ஆடம்பரம் பொருட்களுக்கு அதிகபட்சம் 28 % வரையிலும் செஸ்வரி விதிக்கப்படுகிறது. GST அமலாக்கத்தால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதியிழப்பை ஈடுசெய்வதற்காக இந்த செஸ்வரி வசூலிக்கப்படுகிறது. GST அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பீடுகளை வழங்கும் காலக்கெடு இம்மாதம் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் GST இழப்பீடுகளுக்காக மத்திய அரசை சார்ந்து இருக்கக்கூடாது என்பதோடு மாநிலங்கள் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இந்த வரி அதிகரிப்பை பரிசீலனை செய்வதற்கென GST கவுன்சில் கடந்த வருடம் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் அனைத்து மாநில அமைச்சர்களையும் கொண்ட ஒரு குழுவை நியமித்தது. இந்த குழு வரிசீராய்வு செய்யவும், வரியினங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆலோசனைகளை வழங்கும். இக்குழு தன் பரிந்துரைகளை அடுத்த மாதத்துக்குள் இறுதி செய்து GST கவுன்சில்கூட்டத்தில் தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்த கூட்டம் மேமாத மத்தியில் நடைபெறக்கூடும். அனைத்துப் பொருட்களுக்கும் GST வரி விதிக்கும் முறை சென்ற 2017 ஜூலை 1-ஆம் தேதி நடைமுறைபடுத்தப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பை 2022 , ஜூன் வரை அடுத்த 5 வருடங்களுக்கு வழங்குவது என்றும் மாநில அரசுகளின் வரிவருவாயை 14 சதவீதமாக பாதுகாப்பது என்றும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அந்தக்காலக்கெடு ஜூன் மாதத்தில் முடிகிறது.