Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடூரம்… வாலிபர் வெட்டிக்கொலை… முட்புதரில் கிடந்தசடலம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!

கொடைரோடு அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகில் நிலக்கோட்டை செல்லும் ரோட்டில் அம்மையநாயக்கனூர் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை அருகே முட்புதரில் ஒரு ஆண் பிணம் கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் அம்மையநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய பாண்டியன், சேகர் மற்றும் காவல்துறையினர் பார்வையிட்டார்கள். அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அந்த வாலிபரின் கழுத்து முகம் மற்றும் வலது தோள்பட்டையில் கத்தியால் வெட்டப்பட்டு அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில் கத்தியால் வெட்டி முகம் சிதைக்கப்பட்டு இருந்தது.

மேலும் இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. பச்சை நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், நீல நிற பேண்டும் அவர் போட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு ரூபி என்று அழைக்கப்படும் மோப்ப நாய் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த மோப்ப நாய் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள செட்டியபட்டி வரை ஓடி நின்று, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதன்பின் தடவியல் நிபுணர்கள் வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் கைரேகையை பதிவு செய்தார்கள்.

இதனை தொடர்ந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட வாலிபர் அணிந்திருந்த ஜட்டி ஈரப்பதத்துடன் மணல் ஒட்டி இருந்ததால் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக ஏதேனும் நீர்நிலைகளில் குளித்து இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகிறார்கள். அந்த இடத்திலேயே வைத்து வாலிபரை கொலை செய்துவிட்டு உடலை வண்டியில் ஏற்றி வந்து ஆள் நடமாட்டம் இல்லாத இந்த சுரங்கப்பாதை அருகில் மர்ம நபர்கள் வீசி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

மேலும் இது குறிப்பாக நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி வைகை ஆறு அல்லது செம்பட்டி அடுத்த ஆத்தூர் அணை பகுதியில் வைத்து வாலிபரை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினருக்கு  சந்தேகம் வந்துள்ளது. இதை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை ரோட்டில் மாலையகவுண்டன்பட்டி வரை உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |