IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத்திடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது. புனேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து குவித்தது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 73 ரன்னும் (5பவுண்டரி, 5 சிக்சர்), அம்பத்தி ராயுடு 31 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி ,2 சிக்சர்) எடுத்து குவித்தனர். அதேபோல் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும், முகமது ஷமி, யாஷ் தயாள் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இதையடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
இதில் டேவிட் மில்லர் 51 பந்தில் 94 ரன் (8 பவுண்டரி, 6 சிக்சர் ) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு முக்கியமான பங்கு வகித்தார். தற்காலிக கேப்டனான ரஷீத்கான் 21 பந்தில் 40 ரன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து உதவியாக இருந்தார். சென்னை அணியான பிராவோ 3 விக்கெட் மற்றும் தக்ஷீனா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். CSK அணி 5வது தோல்வியை சந்தித்ததனால் பிளேஆப் சுற்றுக்கு நுழைவது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனால் மீதமுள்ள 8 ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இத்தோல்வி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறியிருப்பதாவது “பந்துவீச்சில் எங்களது தொடக்கம் மிகவும் அபாரமாக இருந்தது.
குறிப்பாக முதல் 6 ஓவரில் சிறப்பாக செயல்பட்டோம். எனினும் மில்லர் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார். இந்த விளையாட்டில் 169 ரன் என்பது சமமான ஸ்கோராகவே நாங்கள் நினைக்கிறோம். அதன்பின் கடைசி 5 ஓவர்களில் நாங்கள் எங்களுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. கிறிஸ் ஜோர்டான் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் ஆவார். இதன் காரணமாகதான் எனக்கு பதிலாக கடைசி 2 ஓவரை அவருக்கு கொடுத்தேன். அவரால் 4 முதல் 5 யார்க்கர் பந்துகளை வீச முடியும். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த விளையாட்டிலும் அப்படி நிகழவில்லை. இது தான் 20ஓவர் போட்டியின் அழகாகுமென ஜடேஜா கூறியிருக்கிறார்.