அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வருகை தரலாம் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யதுருப்புகள் இன அழிப்பை முன்னெடுத்ததற்கான உறுதியான ஆதாரங்கள் தங்களது வசம் உள்ளதாக தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, விளாடிமிர் புடினின் உண்மைமுகம் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களிடம் அம்பலப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே அமெரிக்க அதிபர் ஜோ பைடனை உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்வார் என்றே தாம் நம்புவதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உக்ரைன் வருகை தொடர்பில் அவர் தாம் முடிவெடுக்க வேண்டும் என்றும் போர் சூழலில் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் ஜோ பைடன் அமெரிக்க தலைவர் என்பதால் உக்ரைனில் ரஷ்யதுருப்புகளின் காட்டுமிராண்டித்தனத்தை அவர் கண்கூடாக பார்க்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சென்ற வாரம் இவ்விவகாரம் தொடர்பில் ஜோபைடன் அதிகாரிகளுடன் விவாதித்ததாகவும், அவர்கள் முடிவு அறிவிப்பதை தொடர்ந்தே அவர் உக்ரைன் செல்வது உறுதிசெய்யப்படும் என்றும் தெரியவந்துள்ளது.