Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சருடன் பினராயி விஜயன் விரைவில் சந்திப்பு

நதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விரைவில் சென்னை வந்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வந்திருக்கும் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் கே.சி. கருப்பணன், கன்னியாகுமரியில் 15 கோடி மதிப்பில் விருந்தினர் மாளிகை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார். நதிநீர் பிரச்னைகளில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக கேரள முதலமைச்சர் விரைவில் சென்னை வந்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாகவும் கருப்பணன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், கண்ணகி கோயிலுக்கு நல்ல வழிப்பாதை போட்டு அதனை சுற்றுலாத் தலமாக மாற்றக் கோரிக்கைவிடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அதேபோல தொல்லியல் சார்ந்து மிகப்பெரிய அகழாய்வு முசிறிப்பட்டணத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் கீழடி, முசிறியை ஒப்பிட்டுப் பார்த்து இப்பணிகளை இணைந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறும்போது, கண்ணகி கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், அந்தக் கோயிலுக்கு செல்லும் பாதையில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் இரு மாநில அமைச்சர்கள் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |