மகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனையடுத்து அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா தொற்றில் உயிரிழந்த 80-க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த நாச்சியார்கோவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது.