ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 59 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்சர்களுடன் சதம் விளாசிய அவர், 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 58 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். அந்த அணியில் நிதிஷ் ராணாவின் விக்கெட்டுக்கு பின்னர் வந்த ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி நடையை கட்டினார்.
அரைசதம் விளாசிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சாஹலின் சுழலில் சிக்கிய நிலையில், தொடர்ந்து வந்த சிவம் மாவி, கம்மின்ஸ் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர். சுழல் வித்தை காட்டிய சாஹலுக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்தது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 210 ரன்னில் சுருண்டது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்.