சீனாவில் கொரோனோ வைரஸின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால் சீனாவிலுள்ள இந்திய தூதரகத்தில் ஜனவரி 26ஆம் தேதி நடக்கவிருந்த குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 71ஆவது குடியரசு தினம் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் இந்தியாவில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களிலும் குடியரசு தினம் கொண்டாடப்படும். அதன்படி, வரும் ஜனவரி 26ஆம் தேதி அன்று சீன தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட இருந்தது.
ஆனால், தற்போது சீனாவில் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் குடியரசு தின விழாவை ரத்து செய்ய உள்ளதாக இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸால் இதுவரை சீனாவில் 25 பேர் உயிரிழந்த நிலையில், பொது இடங்களிலும், மக்கள் கூடும் பகுதியிலும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தற்போது குடியரசு தின விழாவும் ரத்து செய்யப்பட உள்ளது. இதனை சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.