Categories
மாநில செய்திகள்

“கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு”… 217 சாட்சிகளிடம் விசாரணை…. உயர்நீதிமன்றம் உத்தரவு…..!!!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் சென்ற 2017ம் வருடம் ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். அத்துடன் அங்கிருந்த முக்கியமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேரளாவை சேர்ந்த தீபு, சயான், சந்தோஷ்சாமி ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை நீலகிரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அங்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் சம்பவம் நடைபெறும்போது நீலகிரியில் கலெக்டராக இருந்த சங்கர், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, அ.தி.மு.க. நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூரை சேர்ந்த சுனில் போன்றோரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வேண்டும் என இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சயான், சந்தோஷ்சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை தள்ளுபடிசெய்த நீதிமன்றம் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபு உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். அதாவது, கோடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன..? என்பது பற்றி சசிகலா, இளவரசி, சுதாகரன் போன்றோருக்குத்தான் தெரியும். இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பாக இவ்வழக்கில் கைதான சயான் பேட்டி கொடுத்துள்ளார். ஆகவே இவர்கள் உள்பட அனைவரிடமும் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும். கீழ் நீதிமன்றம் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் ஷாஜகான், “இந்த கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையினர் மேல் விசாரணை நடத்துகின்றனர். இதில் இதுவரையிலும் 217 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |