Categories
மாநில செய்திகள்

“மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரம்”…. உயர்நீதிமன்றம் கேள்வி…..!!!!!

மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளிலுள்ள காலிப் பணியிடங்களை அவர்களே நிரப்பிக்கொள்ள கடந்த 2020-21-ம் கல்வி ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இச்சம்பவத்தின் பின்னணியிலுள்ள நபர்கள் யார்..? என்பது தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் இந்த முறைகேடுகளுக்கு காரணம் அப்போதைய மருத்துவ மேற்படிப்பு தேர்வுக் குழுவின் செயலாளர் செல்வராஜன்தான் என்று கூறப்பட்டது. இதனையடுத்து ஓய்வுபெற்ற செல்வராஜனின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வராஜன் மேல்முறையீடு செய்துள்ளார். இவ்வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி போன்றோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் செல்வராஜன் தரப்பில், “கொரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்ட 2 கலந்தாய்வுகளில் காலிப் பணியிடங்கள் நிரம்பவில்லை. இதன் காரணமாக தகுதியின்படி மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக்கப்பட்டது. இந்த முடிவானது தனிப்பட்ட முறையில் மனுதாரரால் எடுக்கப்படவில்லை” என்று வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள் “மருத்துவம் படிப்பில் அரசுஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்திய தேர்வுக்குழுவானது, தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும்கலந்தாய்வு நடத்தாதது ஏன்..?

ஆகவே இதில் தேர்வுக்குழு செயலாளரின் நடத்தை தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக இருக்கிறது” என்று கருத்து தெரிவித்தனர். அதன்பின் பணிக்காலம் முடிந்து பணிநீட்டிப்பு வழங்கப்படாத சூழ்நிலையில், செயலாளர் பதவியில் அவரே தொடர்ந்து நீடித்துள்ளார். இவற்றில் அரசு உயர் அதிகாரிகளின் பங்கு என்ன..? என்பது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். இந்த தீவிர குற்றச்சாட்டு தொடர்பாக இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது..? என கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகுதான் காவல்துறையினர் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனரா..? என்பது தொடர்பாகவும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Categories

Tech |